Enter your Email Address to subscribe to our newsletters
திருவனந்தபுரம், 19 அக்டோபர் (ஹி.ச.)
சமீப காலமாக கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
ஒருவகையான மூளைக்காய்ச்சலாக அறியப்படும் இந்த நோயை உண்டு பண்ணும் அமீபாக்கள், கால்நடைகளை குளிப்பாட்டும் குளங்களிலும், பாசிகள், மாசடைந்த நீரிலும் நிறைந்து காணப்படுகிறது என்று கேரள மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் வீடுகளுக்கு அருகே உள்ள கிணறுகளிலும் அமீபாக்கள் காணப்படுவதாகவும் கூறி இருந்தது. இதையடுத்து நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் வேகம் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் அக்.1ம் தேதி முதல் அக்.17ம் தேதி வரை அமீபா தொற்று பாதிக்கப்பட்ட பாதிபேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் மட்டும் கேரளாவில் மொத்தம் 41 நோய் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். அருவிக்கரை, பங்கப்பாறை பகுதில் தலா 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அட்டிங்கல், வாமனாபுரம், விழிஞ்சம், ஏடவா, பாறசாலா, பூலநாடு, அச்சச்சல், குளத்தூர், மாம்பழக்கரை, நேமம், பரதன்னூர், ஆநாடு, மங்களபுரம், ராஜாஜி நகர், தொன்னக்கல் ஆகிய மருத்துவமனைகளில் தலா ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 64 வயது நபர் அக்.17ம் தேதி உயிரிழந்தார். இந்த மாதம் மட்டுமே உயிரிழந்த மொத்தம் 5 பேரில், 3 பேர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மேலும் இரண்டு புதிய நோய் தொற்றாளர்கள் கண்டறிப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் திருவனந்தபுரத்திலும், மற்றொருவர் கோழிக்கோட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b