Enter your Email Address to subscribe to our newsletters
பாட்னா, 19 அக்டோபர் (ஹி.ச.)
பீஹார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. சட்ட பேரவை தேர்தலில் எம்எல்ஏ சீட் கிடைக்காத பலரும் தத்தம் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வேறு ஒருவருக்கு எம்எல்ஏ சீட் தரப்பட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முக்கிய பிரமுகர் மதன் ஷா என்பவர், அக்கட்சி தலைவர் லாலு பிரசாத் வீட்டின் முன்பு திரண்டு சட்டையை கிழித்து அதிருப்தி வெளிப்படுத்தினார்.
பின்னர் தரையில் விழுந்து அழுது பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் அவர் அழுதபடி பேசியிருப்பதாவது,
தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் நான் சீட் கேட்டேன். உங்களுக்கு சீட் தருவோம் என்று உறுதி அளித்தனர்.
அதன் பின்னர் சீட்டுக்காக ரூ.2.7 கோடி தர வேண்டும் என்றனர். இந்த பணத்தை கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் யாதவ் (தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தள ராஜ்யசபா எம்பியாக உள்ளார்) கேட்டார். நான் பணம் தர மறுத்தேன். இப்போது அந்த தொகுதியை வேறு ஒருவருக்கு கொடுத்து இருக்கின்றனர்.
கட்சிக்காக 1990ம் ஆண்டில் இருந்து கடுமையாக உழைத்திருக்கிறேன்.
என் நிலத்தை கூட விற்றிருக்கிறேன். இப்போது எம்எல்ஏ சீட்டை பணத்திற்காக விற்றுள்ளனர்.
என்னை போன்ற கடும் உழைப்பாளிகளை கட்சி ஒதுக்கிவிட்டு, வசதியானவர்களை முன்னிறுத்துகின்றனர். அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது.
இவ்வாறு அந்த வீடியோவில் மதன் ஷா கூறினார்.
சீட் கிடைக்காமல் ஏமாற்றியதாக கட்சி தலைமை மீது புகார் கூறி அழுத மதன் ஷாவை, அங்கிருந்த ஆர்ஜேடி தொண்டர்கள் அகற்றினர்.
Hindusthan Samachar / vidya.b