Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 19 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்களுடன் சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன.
அந்த வகையில் துபாய் ஜெபல்அலி துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலின் ஒரு கண்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகள் இதில் சந்தேகமடைந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து ஆய்வு செய்ததில் அது போலியானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கண்டெய்னரை அதிகாரிகள் சோதனையிட்டதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பண்டல்களும், அதற்கு கீழ் 20 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய 1,300 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3.75 கோடியாகும்.
சிகரெட் பெட்டிகளையும், ரூ.55 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b