Enter your Email Address to subscribe to our newsletters
மும்பை, 19 அக்டோபர் (ஹி.ச.)
மும்பையில் நேரு அறிவியல் மையம் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தின் பெயரில் நேருவின் பெயர் நீக்கப்பட்டு அறிவியல் மையம் என அழைக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது,
பா.ஜனதா `கார்பரேட் இந்துத்வா' விளையாட்டை விளையாடுகிறது. அந்த கட்சி கடவுள், மராட்டியத்தின் அடையாளமாக இருப்பவர்களின் பெயர்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் `கோடக் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்', `ஐ.சி.ஐ.சி.ஐ. லம்போர்டு சித்தி விநாயக்', `எச்.டி.எப்.சி. லைப் மகாலெட்சுமி', `நிப்பான் இந்தியா எம்.எப். ஆச்சர்யா அட்ரே சவுக்' என அழைக்கப்படுகிறது.
மூச்சுக்கு முன்னூறு முறை சத்ரபதி சிவாஜியின் பெயரை கூறும் பா.ஜனதா, அவரது பெயருடன் கார்பரேட் நிறுவன பெயர் இணைக்கப்பட்டு கூறும் விவகாரத்தில் விளக்கம் அளிக்கவேண்டும். இதேபோல பா.ஜனதா மெட்ரோ ரெயில் நிலைய பெயர்களில் இருந்து தேசிய தலைவர்களான நேரு, சஞ்சய் காந்தி ஆகியோரின் பெயர்களை நீக்கி உள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது அவர்களுக்கு உள்ள சகிப்புத்தன்மையின்மையை காட்டுகின்றனர். விமான நிலையங்கள், துறைமுகங்கள், வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய இடங்கள் கூட கார்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படுகிறது. இது சனாதன தர்மம் குறித்து பேசிவிட்டு புனித பெயர்களை பணத்துக்கு விற்பனை செய்யும் பா.ஜனதாவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b