கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரிய தலைவர் ஆலோசனை
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மின்சார வாரி
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரிய தலைவர் ஆலோசனை


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

இது குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பதுடன், மின் தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார வினியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்யவும், மாநில அளவில் மின்சார தளவாடப்பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும்போது, உடனடியாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், மின்சார வாரிய அலுவலர்கள் தலைமையிலான களப்பணி குழுக்கள், தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார்நிலை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM