Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 19 அக்டோபர் (ஹி.ச.)
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை (அக்.20) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புது ஆடை அணிவது, இனிப்பு கொடுப்பது மற்றும் பட்டாசு வெடிப்பது என்பது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
எனவே, புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் பலரும் கடந்த சில நாட்களாகவே தீபாவளி ஷாப்பிங்கை விறுவிறுப்பாக செய்து வந்தனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளனர். புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர். பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இன்றைய மதுரை மலர் சந்தை விலை நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b