Enter your Email Address to subscribe to our newsletters
டேராடூன்,19 அக்டோபர் (ஹி.ச.)
உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், கார் விபத்தில் சிக்கினார். நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுமின்றி அவர் மயிரிழையில் உயிர்தப்பினார்.
இது பற்றிய விவரம் வருமாறு;
காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தராகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத், டில்லியில் இருந்து டேராடூன் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அவருடன் பாதுகாவலர்களும், உதவியாளரும் இருந்தனர்.
அவர் பயணித்த கார், கரோலி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பாதுகாப்பு வாகனம் முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறுக்கே வந்துள்ளார். இதை எதிர்பாராத டிரைவர் வாகனத்தை சட்டென்று நிறுத்தி உள்ளார்.
பாதுகாப்பு வாகனத்தின் பின்னே மற்றொரு காரில் ஹரிஷ் ராவத் வந்து கொண்டிருந்தார். முன்னே சென்ற வாகனம் சட்டென்று நிறுத்திய போது, நிலைதடுமாறிய ஹரிஷ் ராவத் வாகனம் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் காரினுள் ஹரிஷ் ராவத் சிக்கிக் கொள்ள மற்ற கார்களில் வந்த பாதுகாவலர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றி காரில் இருந்து கீழே இறக்கினர்.
நல்வாய்ப்பாக அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. அவருடன் பாதுகாப்புக்காக வந்திருந்த தலைமை காவலர் காயம் அடைய, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை அறிந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, ஹரிஷ் ராவத்தை உடனடியாக தொடர்பு கொண்டு நலன் விசாரித்தார். கடவுகளுக்கு நன்றி கூறிய அவர், முழுமையாக குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சவுத்ரி யாஷ்பால் சிங்கும், ஹரிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்தார்.
தமது எக்ஸ் வலைதள பதிவில் அனைவருக்கும் நன்றி கூறிய ஹரிஷ் ராவத். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை, கார் மட்டும் சேதம் அடைந்து என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM