Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம் ஆகும். தமிழகத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டால், dphepi@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும்.
அத்துடன், மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிக்க வேண்டும். இன்றும் (19-ம் தேதி), நாளையும் (20-ம் தேதி) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும்.
அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b