தொடர் மழையால் கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3 நாளில் 20 அடி உயர்வு
நெல்லை, 19 அக்டோபர் (ஹி.ச.) தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே நெல்லை, மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் அணைகள், குளங்களுக்கு நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்த
Kodumudiyaru


நெல்லை, 19 அக்டோபர் (ஹி.ச.)

தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே நெல்லை, மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் அணைகள், குளங்களுக்கு நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 1/2 அடி உயர்ந்து 90 அடியை நெருங்கி உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 104 அடியை கடந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 95 அடியை நெருங்கி உள்ளது.

திருக்குறுங்குடி பகுதியில் உள்ள 52.50 அடி கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. இன்று நிலவரப்படி அணை நீர்மட்டம் 40.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 191 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் சற்று அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளது.

மாஞ்சோலை மலைப்பகுதியில் மழை குறைந்துவிட்டது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 24 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடையால், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மாநகரை பொறுத்தவரை 3 நாட்களாக தொடர்மழை பெய்ததால் பிரதான சாலைகள் பல்லாங்குழி சாலைகளாக மாறிவிட்டன.

பழையபேட்டையில் தொடங்கி டவுன் ஆர்ச் வரையிலும், வண்ணார்பேட்டை பிரதான சாலை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாகி உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN