Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச)
எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறுவதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வரலாறு காணாத தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவ மழை துவங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, நீர்நிலைகளைப் பேணி இருந்தால் இது போன்றதொரு பேரிடர் ஏற்பட்டிருக்குமா? பருவ மழையை முன்கூட்டியே கணித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இது போன்ற சேதம் தான் ஏற்பட்டிருக்குமா?
முல்லைப் பெரியாறு அணையில் நான்கு நாட்களுக்கு முன்பு வரை 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று இரவு மட்டும் தமிழக நீர்வளத்துறையால் 7,163 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பது தான் வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
மொத்தத்தில் திமுக அரசின் அலட்சியத்தால் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்வெளிகள் சேதமாகியும் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கும் போது, மீட்புப்பணியைத் துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது விளம்பர மாடல் அரசு.
முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உடனடியாகத் தேனி விரைந்துச் சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும்.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கி கைகொடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
Hindusthan Samachar / P YUVARAJ