Enter your Email Address to subscribe to our newsletters
தோஹா,19 அக்டோபர் (ஹி.ச.)
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.
பின்னர் கத்தார் தலையீட்டால் இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. மேலும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் கிரிக்கெட் வீரர்களான கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் உள்பட 8 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு தலீபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறிய செயலால் ஆப்கானிஸ்தான் கடும் கோபம் அடைந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்து இருந்தது.
பின்னர், எல்லை வன்முறையை நிறுத்துதல் மற்றும் எல்லையில் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் தோஹா பேச்சு நடந்தது.
ஆப்கன், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இதில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM