Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 19 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது இந்த நிலையில் ராமநாதபுரத்தை அடுத்த லாந்தை பகுதியில் செயல்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதையில் 10 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி இருப்பதால் அந்த சுரங்கப்பாதை வழியாக நடந்தோ வாகனங்களிலோ செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
ரயில்வே சுரங்க பாதையை தாண்டித்தான் லாந்தை, கண்ணனை, சின்ன தாமரைக்குடி, பெரிய தாமரைக்குடி, லாந்தை காலனி ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் அந்த ஐந்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்பவர்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். ஆனால் குடிநீர் லாரி ,கேஸ் லாரி போன்றவை இந்த 5 கிராமங்களுக்கும் செல்ல முடியவில்லை. அது தவிர ஆம்புலன்ஸ் ஆட்டோ போன்ற வாகனங்களும் செல்ல முடியாததால் மேற்கண்ட 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் சார்பில் அந்த தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணியை செய்து வருகின்றனர். இருந்த போதிலும் மழை நீர் அதிகமாக தேங்கி இருப்பதால் வெளியேற்றும் பணி போதுமானதாக இல்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே போல ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தங்கி இருந்த போது அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தி தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வருகை தந்து அங்கு மேம்பாலம் அமைத்து தரப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அந்தப் பணிகள் முடிவடைய மேலும் ஓர் ஆண்டு காலத்திற்கு மேல் ஆகும் என்பதால் இந்த ஆண்டும் 5 கிராம மக்களும் தங்களது கிராமத்திற்கு செல்ல அவதிப்படும் சூழல் நிலவி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் ஏதேனும் நடவடிக்கை எடுத்து வாகன போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்கக்கூடிய நிலை ஏற்படும் என அந்த கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN