Enter your Email Address to subscribe to our newsletters
திருவாரூர், 19 அக்டோபர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடியானது சுமார் 1.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட நிலையில் அறுவடை பணிகள் 95 சதவீத அளவிற்கு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய ஏதுவாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திருவாரூர் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்துள்ளது.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் வாயிலாக இதுவரை 1.60 லட்சம் மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் 50 சதவீத அளவிற்கே அரவை ஆலைகள் மற்றும் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 7000த்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கி கிடந்து வருகின்றன.
இத்தகைய தேக்கநிலையால் கடந்த 15 தினங்களுக்கு முன்பு குறுவை பருவ நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவந்து சேர்த்தபோதிலும் அதனை கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு ஊழியர்கள் ஆளாகியுள்ளனர்.
இதன்படி தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில் வடுவூர் சாத்தனூர் பகுதியில் இயங்கும் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 7000த்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நினைந்து முளைக்க தொடங்கியுள்ளன. மேலும் முளைத்த நெல்மணிகள் விற்பனை செய்ய முடியாத நிலையால் விவசாயிகள் பறிதவித்து வருகின்றனர்.
மேலும் வடுவூர் சாத்தனூர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை சுற்றியுள்ள சாலைகளிலும் விவசாயிகள் நெல்மணிகளை கொட்டி தார்பாய்கொண்டு முடிவைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது நெல்கொள்முதல் செய்யப்படாதால் நாளை தீபாவளி பண்டிகையினை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மனவேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது கனமழை பெய்துவருவதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கால் பாதிப்புக்கு உள்ளான நெல்மணிகளை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்யவேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN