Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 19 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான இக்கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர்.
இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவில் முன்புள்ள கடற்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கடல் அவ்வப்போது உள்வாங்கி காணப்படும்.
இந்த நிலையில் இன்று (அக் 19) அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. கோவில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 100 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
நாளை அமாவாசை தினம் என்பதால் கடல் உள்வாங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது. கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பச்சை பாசிகள் படிந்த பாறைகள் மீது ஏறக்கூடாது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b