Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியைச் சேர்ந்த வியாபாரியான ஆறுமுகத்திற்கு (51) ஹேமலதா (28) என்ற மகளும், விஜய் (25), அஜய் (23) என இருமகன்களும் உள்ளனர்.
இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு வெடி பட்டாசுகளை தனது வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று (அக்.19) எதிர்பாராத விதமான விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து சிதறின.
பலத்த சத்தத்துடன் வெடித்ததில் வீடு இடிந்து விழுந்ததுடன் தீ விபத்தும் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து வீட்டின் இடர்பாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக உடல்களை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடி விபத்து குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் தடயவியல் நிபுணர்களின் துணையுடன் நேரில் ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தீபாவளி பண்டிகைக்காக நாட்டு வெடி பட்டாசு வாங்க வந்த திருநின்றவூரை சேர்ந்த யாசின் (25) மற்றும் சுனில் பிரகாஷ் (23) ஆகியோர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
ஆனால், மற்ற இருவரின் உடல்கள் முழுவதுமாக சிதைந்ததால் அது யார்? என அடையாளம் காண முடியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், சட்ட விரோதமாக பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட விஜய் வெடி மருந்துகளை வாங்கி, வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்டாசுகளை வீட்டிலேயே வைத்து தயாரித்து வந்ததாக தெரிகிறது. வீட்டில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட விஜயும், ஆறுமுகமும் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்களா? அல்லது தப்பி ஓடினார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b