Enter your Email Address to subscribe to our newsletters
பெர்த், 20 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது.
அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில், ரோகித் (8), கேப்டன் கில் (10), கோலி (0), ஸ்ரேயாஸ் அய்யர் (11) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்சர் பட்டேல் (31), கே.எல். ராகுல் (38) சற்று நிலைத்து நின்று ஆடினர். இதனால், இந்திய அணி ரன்களை சேர்த்தது. அவர்கள் ஆட்டமிழந்ததும், வாஷிங்டன் சுந்தர் (10), ராணா (1) ரன்களில் வெளியேறினர். நிதிஷ் குமார் ரெட்டி (19) 2 சிக்சர்களுடன் ஆட்டமிழக்கவில்லை. அர்ஷ்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். முகமது சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. ஹேசல்வுட், ஓவன், மேத்யூ குனேமான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். மழையால் ஆட்டம் 50 ஓவர்களுக்கு பதிலாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. டி.எல்.எஸ். விதிகளின்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 131 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஆடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டனான மிட்செல் மார்ஷ் 46 (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 8 ரன்களில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜோஷ் பிலிப் 37 ரன்களில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேம் ரென்ஷா (21) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், போட்டியில் மொத்தம் 21.1 ஓவரில் 131 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM