Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் வாங்கப்படுவதாக கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, தமிழக வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, கழிவறையில் இருந்து 39,000-க்கும் அதிகமான பணத்தை மீட்டனர்.
கிண்டியில் உள்ள மாநில வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த அதிரடி சோதனை நடைபெற்றது.
சோதனை நடந்துகொண்டிருந்தபோது, குரூப்-I அதிகாரி ஒருவர் கழிவறைக்குச் சென்று, கணக்கில் வராத பணத்தை அங்கிருந்த கழிவறையில் போட்டு 'பிளஷ்' செய்து அதை அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை வெளியே வரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று சோதனையிட்டபோது, அவர் ரூபாய் நோட்டுகளைத் தண்ணீரில் போட்டு அழிக்க முயன்றதைக் கண்டறிந்தனர்.
கழிவறைக்குள் சிக்கியிருந்த பணம் மற்றும் நோட்டுகளை மீட்க, லஞ்ச ஒழிப்புப் துறையினர் வெளியாட்களின் உதவியுடன் பணத்தை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும், ஒரு மூத்த அதிகாரி தனது வாகனத்தை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு, சுவர் ஏறி குதித்து வளாகத்திலிருந்து வெளியேறித் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பல மணி நேரம் நடந்த இந்தச் சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக 4.73 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
'தீபாவளி பண்டிகை பரிசு' என்ற பெயரில் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் கேட்பதாகவும், பணம் பெறுவதாகவும் பெறப்பட்ட குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில் இந்தக் சோதனை நடத்தப்பட்டது.
அரசு ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டி லஞ்சம் கேட்பது, மற்றும் ஒப்பந்ததாரர்கள்/தொழிலதிபர்கள் தீபாவளிப் பரிசுகள் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகப் பல புகார்கள் வந்தன. இதன் விளைவாக, லஞ்ச ஒழிப்புத் துறையால் அக்டோபர் 15 அன்று மாநிலம் தழுவிய அளவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சிறப்பு ஆபரேஷன் நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் முதல் இரண்டு நாட்களில், தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, மொத்தம் 37,74,860 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ