Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 20 அக்டோபர் (ஹி.ச.)
குன்னூரில் இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் கல்லாரில் இருந்து ஆடர்லி இடையேயான பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக 7 இடங்களில் மரங்கள் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் கட்டப்பெட்டு சாலை மற்றும் சோலூர்மட்டம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி உதவியுடன் மண் சரிவை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். குன்னூர் அம்பிகாபுரத்தில் கார் மீது மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
இதனால், இரண்டாவது நாளாக இன்றும் மேட்டுப்பாளையம்-குன்னூர் மற்றும் குன்னூர் ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN