Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 20 அக்டோபர் (ஹி.ச.)
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், 11ல், 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு தேர்தல் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதன்படி, பா.ஜ., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, 29 தொகுதிகளில் களம் காண்கிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், ஆளும் பாஜவின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இந்த வாரம் தொடங்க உள்ளார்.
இது குறித்து பீஹார் மாநில பாஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
அக்டோபர் 24ம் தேதி பிரதமர் மோடி தனது முதல் பேரணியை சமஸ்திபூரில் நடத்துவார்.
அங்கு அவர் பீஹார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்ப்பூரி தாக்கூருக்கு அஞ்சலி செலுத்துவார்.
அவரது இரண்டாவது பேரணி, அன்றைய தினம் பிற்பகல் பெகுசராயில் நடைபெறும். மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி ஓட்டு சேகரிக்கிறார்.
அக்டோபர் 30ம் தேதி, சரண் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்ட முசாபர்பூர் மற்றும் சாப்ரா ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
பின்னர், அவர் அடுத்தக்கட்டமாக நவம்பரில் 2, 3, 6, 7 ஆகிய தேதிகளில் பீஹாரின் பிற பகுதிகளில்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இவை குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM