Enter your Email Address to subscribe to our newsletters
பாட்னா, 20 அக்டோபர் (ஹி.ச.)
பீஹார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
நவ.6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கும், நவ.11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்று, பதிவான வாக்குகள் நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
2வது கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று
(அக் 20) , ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், 143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டிருப்பது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுவரை 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியிலும், சந்திரசேகர் மாதேபூராவிலும், வீணா தேவி மோகமா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு 144 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி, இந்த ஆண்டு ஒரு சீட் குறைவாக 143 இடங்களில் போட்டியிடுகிறது.
ஏற்கனவே, பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்து விலகி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தற்போது, முக்கிய கட்சிகளான காங்கிரஸ், ஆர்ஜேடி இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாறி மாறி வேட்பாளர்களை மட்டும் அறிவித்து வருவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b