சிறையில் இருக்கும் ஏழை கைதிகளுக்கு ஜாமீன் தொகை வழங்க திருத்தப்பட்ட விதிமுறை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடில்லி, 20 அக்டோபர் (ஹி.ச.) ஜாமீன் கிடைத்தபோதிலும், அதற்கான தொகையை செலுத்த முடியாமல், சிறையிலேயே அவதிப்படும் ஏழை விசாரணை கைதிகள் நலனுக்காக தேசிய குற்ற ஆவணப்பிரிவு மூலம் கோர்ட்டுகளுக்கு ஜாமீன் தொகை செலுத்தும் திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது
சிறையில் இருக்கும் ஏழை கைதிகளுக்கு ஜாமீன் தொகை வழங்க திருத்தப்பட்ட விதிமுறை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடில்லி, 20 அக்டோபர் (ஹி.ச.)

ஜாமீன் கிடைத்தபோதிலும், அதற்கான தொகையை செலுத்த முடியாமல், சிறையிலேயே அவதிப்படும் ஏழை விசாரணை கைதிகள் நலனுக்காக தேசிய குற்ற ஆவணப்பிரிவு மூலம் கோர்ட்டுகளுக்கு ஜாமீன் தொகை செலுத்தும் திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

அதை அமல்படுத்துவதற்கான நிலையான விதிமுறைகளை கடந்த பிப்ரவரி 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டது.

இதற்கிடையே, அந்த விதிமுறைகளில் மாற்றம் செய்ய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, கோர்ட்டு ஆலோசகர் சித்தார்த் லுத்ரா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

அதை ஏற்று, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, நிலையான விதிமுறைகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய அதிகார குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

எந்த ஏழை கைதியாவது ஜாமீன் கிடைத்தும், 7 நாட்கள் வரை சிறையில் இருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

அவர், கைதியிடம் பணம் இல்லை என்று உறுதி செய்த 5 நாட்களில், கைதிக்காக கோர்ட்டுக்கு ஜாமீன் தொகை செலுத்தப்படும் என்று திருத்தப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM