Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கொள்முதலுக்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தேக்கமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள
அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன்.
மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b