Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக் 21) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
இந்த நிலையில் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த மழையின் அளவு அதிகரித்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை அதிகளவு பெய்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மேலும் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது. பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / vidya.b