சென்னை சூளைமேட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் - மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச) சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தீபா என்பவர் கடந்த மாதம் 2 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தா
Choolaimedu


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச)

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தீபா என்பவர் கடந்த மாதம் 2 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

தீபாவின் தாயார் லட்சுமி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சூளைமேடு போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாருடைய அலட்சியம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்காக கடந்த மாதம் 5 ஆம் தேதி சூளைமேடு போலீசார் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதற்கு தனியார் நிறுவனத்திற்கு அந்த பணியை கொடுத்ததாக மாநகராட்சி தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பதில் கடிதத்தில் முழுமையான விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை என தெரிகிறது.

போலீசார் தங்களுடைய விசாரணை தேவையான எந்த தகவலும் அதில் இல்லாததால் மீண்டும் மாநகராட்சிக்கு மற்றொரு கடிதத்தை சூளைமேடு போலீசார் அனுப்பி உள்ளனர்.

பதில் கடிதத்தை வைத்து சட்ட ஆலோசனை நடத்தி பிறகே 2 வது கடிதத்தை போலீசார் அனுப்பினர்.

அதில், மாநகராட்சி பொறுப்பு அதிகாரி யார்? மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட நபர்கள் யார்- யார்? தனியார் நிறுவனத்தின் முழு விவரங்ள்? என அனைத்து விரிவான அறிக்கையாக அளிக்கும் படி மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த கடிதத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூளைமேடு போலீசார் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெயர் குறிப்பிடாமல் மாநகராட்சி அதிகாரிகள் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மாநகராட்சியிடம் இருந்து விரிவான தகவல்கள் வந்த பிறகு அந்த அதிகாரிகளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ