Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அருள்ஜோதி உணவகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அந்த உணவகத்தில் தமிழர்களும் வடமாநிலத்தவர்களும் இணைந்து பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு முன்னர் வேலை பார்த்த ரித்திக் என்ற வடமாநிலத்தவர் தனது நண்பர்களுடன், அந்த உணவகத்தில் தற்போது வேலை பார்க்கும் நண்பரை பார்ப்பதற்காக குடிபோதையில் உணவகத்துக்கு வந்து உள்ளனர்.
அப்போது உணவகம் மூடப்பட்ட நிலையில் இருந்ததால், காவலாளர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர்கள் காவலாளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டு அங்கிருந்த தமிழர்கள் தட்டிக் கேட்ட போது, அவர்களும் தாக்கப்பட்டு உள்ளனர்.
பின்னர் உணவகத்தின் வெளியே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு மோதலாக மாறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan