Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.)
100 பவுன் பழைய தங்க நகை வாங்கித் தருவதாக கூறி, வாலிபரிடம் ரூபாய் 50 லட்சம் கொள்ளை அடித்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மூன்று பேரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது உறவினர் பாண்டீஸ்வரன் இவர்கள் பழைய நகைகளை வாங்கி புதுப்பித்து விற்று வந்தனர். இவர்கள் கஞ்சா விற்ற வழக்கில், ஏற்கனவே கைதாகி தேனி கிளை சிறையில் இருந்தனர். அப்பொழுது மதுரை அருகே கருப்பாயூரணியை சேர்ந்த தர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு விஜய், தர்மாவிடம் பழைய தங்கம் இருந்தால் தகவல் தருமாறு கூறினார்.
சம்பவத்தன்று தர்மா, விஜய்க்கு போன் செய்து கோவையில் 100 பவுன் பழைய தங்கம் உள்ளது. ரூபாய் 50 லட்சம் கொடுத்தால் வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
அதை நம்பி விஜய் ரூபாய் 50 லட்சத்தை ஏற்பாடு செய்தார். இதை அடுத்து அவருக்கு, பாண்டீஸ்வரனும் தேனியில் இருந்து தனித், தனி காரில் புறப்பட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நள்ளிரவு 12 மணிக்கு கோவை வந்தனர். அவர்களை தர்மா தொண்டாமுத்தூர் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்க வைத்தார்.
அப்பொழுது அவர்கள் மாதம்பட்டி சென்றனர். அங்கு ரூபாய் 50 லட்சம் பணத்தை கொடுக்கும் படி விஜயிடம் தர்மா கேட்டு உள்ளார். அதன்படி விஜய் பணத்தை கொடுத்தார். பின்னர் நகைகளை தருவதாக கூறியதால், விஜயை மட்டும் தனியாக தனது காரில் தர்மா மற்றும் அவருடன் வந்தவர்கள் மற்றொரு காரிலும் சென்றனர்.
அப்பொழுது விஜய் கார் மீது மோதுவது போல் சிலர் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், காரை வேகமாக திருப்பி தப்பிச் செல்ல முயன்றார். அவர் மீது மோதுவது போல் வந்த கார் திடீரென கவிழ்ந்தது. உடனே அந்த கும்பல் விஜயிடம் கொள்ளை அடித்து ரூபாய் 50 லட்சத்துடன் தப்பிச் சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் பேரூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து ரூபாய் 50 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்ற தர்மா உட்பட ஆறு பேரு கும்பலை வலை வீசி தேடி வந்த நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த அழகு பாண்டி, கோபி மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பிச் சென்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan