Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 21 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த 2013ல் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் வாயிலாக லோக்பால் அமைப்பு, மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
பிரதமர், முன்னாள் பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் குறித்த ஊழல் புகார்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கிறது.
இதன் தலைவராக நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் உள்ளார். அவருக்கு கீழ் ஆறு உறுப்பினர்கள் என, மொத்தம் ஏழு பேர் உள்ளனர்.
இந்நிலையில், ஏழு உயர் ரக பி.எம்.டபிள்யூ., கார்களை வாங்க விரும்பிய லோக்பால் அமைப்பு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.
கடந்த 16ம் தேதியிட்ட ஒப்பந்தத்தில், 'பி.எம்.டபிள்யூ., - 3 வரிசை கார்களை வாங்க புகழ்பெற்ற நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பாக, வெள்ளை நிறத்தில், 'ஸ்போர்ட்' ரக கார்கள் தேவை' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில், இந்த காரின் விலை, 70 லட்சம் ரூபாய். லோக்பால் குறிப்பிட்ட ஏழு கார்களின் விலை 5 கோடி ரூபாய்.
'புதிதாக வாங்கும் கார்களை, டில்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள அலுவலகத்தில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும்' என, ஒப்பந்தத்தில் லோக்பால் குறிப்பிட்டு உள்ளது.
கார் வாங்கிய பின், ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு வார கால பயிற்சியை பி.எம்.டபிள்யூ., நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM