Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது
உச்சநீதிமன்றத்தில் உரிய அதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணைகட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசும், அம்மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
முல்லைப்பெரியாறு அணை வலுவோடும், உறுதித் தன்மையோடும் இருப்பதாக ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்குழு தெரிவித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வழக்குகளை தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதோடு, பேபி அணை மற்றும் சுற்றிய பகுதிகளை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்ற பின்பும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு விஷமத்தனமானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b