Enter your Email Address to subscribe to our newsletters
கழுகுமலை, 21 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை திருக்கோவில் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றதாக கருதப்படுகிறது. இது முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு என்றும், தென்பழனி என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நாளை (22.10.2025) தொடங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை (1.11.2025) நடைபெறுகிறது.
நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறும்.
அதை தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 26-ம் தேதி சூரனின் தம்பி தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வு கழுகுமலை திருத்தலத்தில் மட்டுமே நடைபெறும்.
வேறு எந்த திருத்தலத்திலும் நடைபெறாது.
விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் 27-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 12 மணிக்கு கோவிலில் சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடைபெறும். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்திற்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 5 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
29-ம் தேதி இரவு 7 மணியளவில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 30 ம் தேதி இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 31 ம் தேதி பட்டின் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் நவம்பர் 1 ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b