மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 91.55 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,677 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் அணை மூடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு மேலும் 5 அடி உயர்ந்து 109 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

கொடுமுடியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 42.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 61 கனஅடியாகவும், வெளியேற்றம் 5 கனஅடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் நீர்வரத்து அதிகரித்து விரைவில் நிரம்பும் வகையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் உபரிநீர் வெளியேறி வருகிறது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாவிட்டாலும் காட்டாற்று வெள்ளம் மற்றும் ஊர் பகுதியில் பெய்த மழையால் பெருகி ஓடிய தண்ணீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது.

இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து ஓடுகிறது.

Hindusthan Samachar / vidya.b