Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 21 அக்டோபர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாகவே, கேரளாவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடையும் வாய்ப்புள்ளது.
பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் வரை மேல் காற்று சுழற்சி நீடிக்கிறது.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b