Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்கள்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுகளுக்கேற்ப சென்னை மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெருநகர மாநகராட்சி வாயிலாக இந்த உணவு மையங்களிலிருந்து இன்று (22.10.2025) காலை 1 இலட்சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட குடிநீர்வாரியத்தின் மூலம் 22 ஆயிரம் பேரும் 2149 களப்பணியாளர்களும் சென்னை பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b