Enter your Email Address to subscribe to our newsletters
தஞ்சாவூர், 22 அக்டோபர் (ஹி.ச.)
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
கொள்முதல் நிலையங்களில் லாரிகள் முறையாக இயக்கம் செய்யப்படாததால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொட்டி வைத்து, விவசாயிகள் பல நாட்களாக காத்து கிடக்கின்றனர்.
மழையில், நனைந்த மூட்டைகளில் இருந்து, நெல்மணிகள் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை அருகே காட்டூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (அக் 22) பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நானும் ஒரு விவசாயி தான்.
அதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு அனைத்தும் தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது, எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காட்டூரைத் தொடர்ந்து, மூர்த்தியம்மாள்புரம் , திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b