சுருளி அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் குளிக்க அனுமதி - வனத்துறை தகவல்
தேனி , 22 அக்டோபர் (ஹி.ச.) தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா தளமாக விளங்கும் சுருளி அருவியில் அக். 17 இரவு பெய்த மழையால் இரவங்கலாறு , மணலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோட
சுருளி அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் குளிக்க அனுமதி - வனத்துறை தகவல்


தேனி , 22 அக்டோபர் (ஹி.ச.)

தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா தளமாக விளங்கும் சுருளி அருவியில் அக். 17 இரவு பெய்த மழையால் இரவங்கலாறு , மணலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது.

வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க தடை விதித்தனர். நேற்று (அக் 21) நான்காவது நாளாக வெள்ளம் கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்திருந்தனர்.

மேலும் ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அருவியில் வெள்ளம் குறைந்தால் தான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.

ஆனால் அருவியில் இன்று(அக் 22) நீர் வரத்து குறையவில்லை. மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழையில் வந்த காட்டாற்று வெள்ளத்தில் அருவியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் அடித்து வந்த பாறைகள் அருவியில் குளிக்கும் இடத்தில் கிடக்கிறது. அருவிக்கு வரும் படிக்கட்டுகள், பக்கவாட்டு கம்பிகள் சேதமடைந்தும் குளிக்கும் இடத்தில் மரம், செடிகள் கிடக்கின்றன.

இவற்றை அகற்றும் பணிகள், தடுப்பு கம்பிகளை புதுப்பிக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வெள்ளம் குறைந்தால் தான் பராமரிப்பு பணிகள் செய்ய முடியும் என்று கூறிய வனத்துறை அதிகாரிகள் இப்பணிகள் முடிந்த பின்பு தான் குளிக்க அனுமதி வழங்க முடியும் என கூறினர்.

எனவே இப்போதைக்கு ஒரு வாரத்திற்கு குளிக்க அனுமதிக்க முடியாத நிலை தான் உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b