Enter your Email Address to subscribe to our newsletters
திருச்சி, 22 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திருச்சி மாவட்டத்தில் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று (அக் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், காவிரி, கொள்ளிட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பருவமழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணை முழுக் கொள்ளளவில் இருப்பதாலும், அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
Hindusthan Samachar / vidya.b