Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 22 அக்டோபர் (ஹி.ச.)
இந்த ஆண்டு தீபாவளி புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள் என வழக்கமான கொண்டாட்டங்களை தாண்டி, ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பொருளை, அதாவது வீட்டு உபயோக பொருளாக இருந்தாலும் சரி, ஆடம்பர பொருளாகவும் சரி வாங்க வைத்துவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி. குறைப்புதான். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி கட்டவேண்டியது இல்லை என்ற அறிவிப்பு வெளியிட்டதால், அத்தகைய வருமான வரம்புக்குள் இருப்பவர்கள் வருமான வரி வளையத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். அவர்களது வருமானம் சேமிப்பாகவோ, செலவழிக்க கையில் பணமாகவோ இருந்தது.
இது மட்டுமல்லாமல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் மாதத்தில் அவரது தலைமையில் நடந்த மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளித்த வரி குறைப்பை அறிவித்தார்.
இதுவரை 5,12,18,28 என்ற 4 விகிதங்களில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. இனி 2 விகிதங்களாக குறைக்கப்படும். அதாவது இனி 5 மற்றும் 18 சதவீதங்களாக மட்டுமே விதிக்கப்படும் என்று அறிவித்ததால் 380 பொருட்களின் விலை குறைந்தது. இது தீபாவளி விற்பனையில் நாடு முழுவதும் எதிரொலித்தது.
இதைத் தொடர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. குறைப்பு அமலுக்கு வந்ததில் இருந்தே அனைத்து பொருட்களுக்கும் குறைக்கப்பட்ட இந்த வரி நுகர்வோரை சென்றடைகிறதா? என்பதை 54 பொருட்களின் விற்பனை விலை அனைத்து மண்டல அளவிலும் கண்காணிக்கப்பட்டது. அனைத்து பொருட்களின் விலையும் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த வரி குறைப்பினால் இந்த ஆண்டு 10 சதவீத நுகர்வு அதிகரிக்கிறது. அதாவது கடந்த ஆண்டு இந்தியாவில் மக்களின் நுகர்வு ரூ.202 லட்சம் கோடி என்ற அளவில் இருந்தது. இது இந்த ஆண்டு வரி குறைப்பினால் கூடுதலாக ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் விற்பனை பெருகும் என தெரிவித்தார்.
இது தீபாவளி விற்பனையில் இருந்தே தொடங்கிவிட்டது. வரி குறைக்கப்பட்ட கார்கள், ஸ்கூட்டர்கள், ஏ.சி.கள், வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ்கள் என்று எப்போதாவது வாங்கும் பொருட்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்தது. இது தவிர ஆடைகள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மட்டுமல்லாமல் நெய் மற்றும் பலகாரங்கள் விலை குறைந்து இருந்ததால் தீபாவளிக்கு எல்லோருமே தாராளமாக வாங்கியதால் வர்த்தகம் அதிகரித்தது.
கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. ஆன்லைனிலும் வர்த்தகம் களைக்கட்டியது. கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் விற்பனை இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது.
மொத்தத்தில் இந்த வரி குறைப்பு மக்களுக்கு மட்டும் பயனளிக்காமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபரிமிதமான பங்களிப்பை நல்கியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM