நெல்லையில் குறைந்த மழை - அணைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்!
நெல்லை, 22 அக்டோபர் (ஹி.ச..) நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் சுமார் 1 வாரத்திற்கு பின்னர் வெயில் தலைகாட்டி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து களக்காடு, சேரன்மகாதேவி, அம்பா
Manimuthar Falls


நெல்லை, 22 அக்டோபர் (ஹி.ச..)

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் சுமார் 1 வாரத்திற்கு பின்னர் வெயில் தலைகாட்டி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து களக்காடு, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் தொடர் கனமழையால் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இன்றும் 9-வது நாளாக கோவில் செல்ல தடை நீடிக்கிறது. அதேநேரம் நம்பியாற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது.

களக்காடு தலையணையிலும் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் இன்று மழை குறைந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 94 1/2 அடியை எட்டியுள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியை கடந்துள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை கடந்துள்ள நிலையில் அணை நிரம்ப இன்னும் 9 அடி நீரே தேவைப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் மழை குறைந்துள்ளது.

எனினும் மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின் அளவு குறையவில்லை என்பதால் அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது. ஊத்து எஸ்டேட்டில் 9 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி எஸ்டேட் பகுதிகளில் தலா 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN