Enter your Email Address to subscribe to our newsletters
சபரிமலை, 22 அக்டோபர் (ஹி.ச.)
கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று (அக் 22) காலை 9.35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார்.
நிலக்கல்லில் இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார்.
பம்பை கணபதி கோயிலில் வைத்து இருமுடி கட்டிய பின் 11 மணியளவில் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சன்னிதானம் சென்றார்.
அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
இதையடுத்து, சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஜனாதிபதியிடம் இருமுடியை பெற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி வருகை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி சபரிமலைக்கு வருவதை முன்னிட்டு இரண்டு நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இரண்டு நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b