Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 22 அக்டோபர் (ஹி.ச.)
நாடு முழுதும் நீதிமன்றங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பதாகவும், அவற்றை துாய்மைப்படுத்தக் கோரியும் வழக்கறிஞர் ராஜீப் கலிதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுத்தமான பொது கழிப்பறை இருப்பது மாநில அரசுகளின் கடமை என்றும், அந்த வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜன., 15ல் உத்தரவிட்டது.
மேலும், நாட்டில் உள்ள நீதிமன்ற வளாகங்களில், ஆண், பெண், மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு தனித்தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பல உயர் நீதிமன்றங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுதும் நீதிமன்ற வளாகங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுப்பவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மீறும் செயல்.
தலைநகரங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் கூட கழிப்பறைகளின் நிலை மிக மோசமாக உள்ளது. நிதி ஒதுக்கீடு, பராமரிப்பு ஒப்பந்தங்களை அமல்படுத்துதலில் உள்ள நிர்வாக தோல்வியையே இது காட்டுகிறது.
மேலும், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி கழிப்பறை இல்லாதது அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை புறக்கணிப்பதாகவே உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM