Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல், 22 அக்டோபர் (ஹி.ச.)
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக் கட்டுதல் நடைபெறுகிறது.
7 நாட்கள் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில் (27.10.2025) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 11.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், 11.45 மணிக்கு மண்டகப்படி நடக்கிறது.
பின்பு 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் 3.00 மணிக்கு அசுரர்களை வதம் செய்வதற்காக அம்மனிடம் சின்னக்குமாரர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார்.
பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவில் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.
விழாவில் 7-ம் நாள் 28-ம் தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
காலை 10.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7.00 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM