தூத்துக்குடியில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை முறைப்படுத்தி முறையாக கண்காணித்து வருகிறோம் - மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று (அக் 22) காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகிய
தூத்துக்குடியில் மழை முன்னெச்சரிக்கை  பணிகளை முறைப்படுத்தி முறையாக கண்காணித்து வருகிறோம் - மேயர் ஜெகன் பெரியசாமி


தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று (அக் 22) காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்.

முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது,

வடகிழக்கு பருவ மழை 4 நாட்களாக பெய்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் 58 வார்டுகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இயல்பாக இருந்து வருகிறது. 16, 17 ஆகிய வார்டுகளில் மட்டும் 3 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அதிலும் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

16, 17, 18 ஆகிய 3 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளும், சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுவதால் மழைநீர் தேங்கியுள்ளது.

அதையும் முறைப்படுத்தி அப்புறப்படுத்தி வருகிறோம். இந்த பகுதியில் மழை காலம் முடிந்து ஜனவரிக்குப் பின் சாலை அமைக்கும் பணி நடைபெறும். மாநகரில் உள்ள பல விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்டவைகளில் தேங்கிய மழைநீரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வடகிழக்கு பருவமழையின் போது கால் சென்டருக்கு 40 புகார்கள் வந்த நிலையில் அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. வார்டு 3, 7 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத நிலை உள்ளது.

அங்கும் மழை காலத்திற்குப் பின் முழுமையாக சாலை பணி துவங்கும். மாநகராட்சிக்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 27 கி.மீ தூரம் உள்ளது.

அதில் மழையால் சேதமடைந்து காணப்படும் சிறிய குழிகள் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் பேட்ச் ஒர்க் முழுமையாக நடைபெறும்.

மாநகராட்சி பகுதிக்குள் எல்லா பணிகளையும் முறைப்படுத்தி முறையாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு மாநகராட்சிக்கு அவசியம். எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலை பேசி எண்களுக்கு புகாராக தெரிவிக்கலாம். எல்லோருக்கும் சுகாதாரம் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு அதற்கான முகாம்களும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமார், உதவிஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நெடுமாறன். இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் அனுசவுந்தர்யா, அபிலாவண்யா, ஹரிகிருஷ்ணன் தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மற்றும் கவுன்சிலர்கள் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b