Enter your Email Address to subscribe to our newsletters
மிர்புர், 22 அக்டோபர் (ஹி.ச.)
வங்காளதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சவுமியா சர்கார் 45 ரன்னும், ரிஷாத் ஹூசைன் 39 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 32 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்த்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 10 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்காளதேச அணி 6 பந்துகளில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன்களே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களான அகீல் ஹொசைன், ரோஸ்டன் சேஸ், காரி பியர், குடகேஷ் மோட்டி மற்றும் அலிக் அதனேஸ் ஆகியோரே வீசினர் (தலா 10 ஓவர்கள்).
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து வீசிய முதல் அணி என்ற வித்தியாசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM