Enter your Email Address to subscribe to our newsletters
உசிலம்பட்டி, 22 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்துள்ள ஜம்பலப்புரம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இதில் ஜோதிராஜன், தெய்வத்தாய், முத்துக்காளை உள்ளிட்ட விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மக்காச்சோள பயிர்கள் இன்னும் சில மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தலா 4 ஏக்கர், 5 ஏக்கர் விதம் சுமார் 12 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், காட்டுப் பன்றிகள் மட்டுமல்லாது, மயில்களும் மக்காச்சோள பயிர்களின் குருத்து பகுதியை சேதப்படுத்தி வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தகவலறிந்து வனத்துறை மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J