இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் - ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் களமிறங்கும் இந்திய அணி
அடிலெய்டு, 23 அக்டோபர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற
இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் - ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் களமிறங்கும் இந்திய அணி


அடிலெய்டு, 23 அக்டோபர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு அடிலெய்டில் நடைபெறுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிய மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்த தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதனால் இந்த ஆட்டத்தில் கணிசமாக ரன் குவித்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடும் அழுத்தத்திற்குள்ளாக நேரிடும். சாதனையை நோக்கி பயணிக்கும் கோலி இன்னும் 54 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இலங்கையின் சங்கக்கராவை (14,234 ரன்) பின்னுக்கு தள்ளுவார். அடிலெய்டு மைதானத்தில் கோலி ஏற்கனவே இரண்டு சதங்கள் அடித்திருப்பது நினைவு கூரத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்திலேயே தொடரை வசப்படுத்திட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். முதல் ஆட்டத்தில் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் பேட்டிங்கிலும் மிரட்டினர். முந்தைய ஆட்டத்தில் விளையாடாத விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா அணிக்கு திரும்புகிறார்கள்.

பெர்த் போன்று அடிலெய்டில் மழை ஆபத்து இல்லை. ஆனாலும் மேகமூட்டமான, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும் என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, ரென்ஷா, கனோலி, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

Hindusthan Samachar / JANAKI RAM