Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 23 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் கடந்த 7 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்றைய தினம் மழையின் அளவு வெகுவாக குறைந்த நிலையில், முதற்கட்டமாக ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டன.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் பராமரிப்பு பணி செய்யப்பட வேண்டியுள்ளதால் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காட்டாற்று வெள்ளத்தின் போது குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் இருந்த தடுப்புகள் மற்றும் உடைமாற்றும் அறைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அதனை சீர் செய்த பின்னர் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிற்றருவியில் குளிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN