Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
தென் மாவட்டங்களில் ரூ.1000 கோடி கனிமவளகொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளதுஎனவே இந்த விவகாரங்களை சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் மட்டும் ரூ. 1000 கோடிக்கும் கூடுதலாக கனிமவளக் கொள்ளை நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவற்றைத் தடுக்கவும், அதில் சம்பந்தப்பட்ட கனிமவளக் கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கனிமக் கொள்ளையர்களை பாதுகாத்து வருவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தென்மாவட்டங்களுக்கு இயற்கைக் கொடுத்தக் கொடை மேற்குத் தொடர்ச்சி மலைகளும், அதையொட்டிய மலைக்குன்றுகளும் ஆகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடித் தொடர்பு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள், அதையொட்டிய பகுதிகளில் கல் குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தான் மிக அதிக எண்ணிக்கையில் உரிமம் பெற்ற குவாரிகளும், சட்டவிரோத குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. கேரளத்தில் ஆற்று மணல் அள்ளவும், மலைகளை உடைத்து ஜல்லி, எம் &சாண்ட் போன்ற கட்டுமானப் பொருள்களை தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டு இயற்கை வளம் பாதுகாக்கப்படும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அவை சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படுகின்றன.
அண்மையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் ஏறுவதற்காக திருவனந்தபுரம் நோக்கி மகிழுந்தில் நான் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் சாரை சாரையாக பெரிய சரக்குந்துகள் வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அவை எங்கு செல்கின்றன என்று விசாரித்த போது, தென் மாவட்டங்களில் உள்ள சட்டப்படியான கல் குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோத கல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, இந்த சரக்குந்துகள் மூலமாக கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப் படுவதாகவும், அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட கனிம வளங்களை இறக்கி விட்டு, அடுத்த சுமையை ஏற்றுவதற்காக கல்குவாரிகளுக்குத் தான் அந்த சரக்குந்துகள் செல்வதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
நேரடியாக நான் பார்த்த எண்ணிக்கையிலான சரக்குந்துகளில் கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப் படுவது தொடர்ந்தால், தென் மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியே காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது என்பது தான் உண்மையாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் பட்டவர்த்தனமாக கொள்ளையடிக்கப்படும் நிலையில், அதனால், சுற்றுச்சூழலுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. கனிம வளக் கொள்ளை கட்டுப்படுத்தப்படாவிட்டால், கேரளத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்டது போன்ற நிலச்சரிவு உள்ளிட்ட பேரழிவுகள் தமிழ்நாட்டிலும் ஏற்படக்கூடும். அவ்வாறு நடந்தால் அதை தமிழகத்தால் தாங்க முடியாது.
அதை தடுக்க வேண்டிய அரசு, அதற்கு பதிலாக கனிமவளக் கொள்ளையை ஊக்குவித்து வருகிறது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவர்கள் திமுக மற்றும் அதன் அனுதாபிகள் என்பது தான் இதற்குக் காரணம் ஆகும். தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளின் காட்பாதராகத் திகழ்பவர் ஆளுங்கட்சியின் பெரும்புள்ளி ஒருவரும், அவரது குடும்பத்தினரும் என்று கூறப்படுகிறது. அவரைப் பகைத்துக் கொள்ளும் சுரங்கத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் எவரும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பணி செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனாலும் அரசு மவுனம் காக்கிறது.
2022 மே மாதத்தில் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் என்னும் இடத்தில் சங்கரநாராயணன் என்பவரின் குவாரியில் சட்டவிரோதமாக விதிகளை மீறி கல் வெட்டி எடுக்கப்பட்டதால், பாறைகள் சரிந்து நான்கு பேர் இறந்தனர். அது குறித்து விசாரிக்க அப்போதைய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் நிர்மல்ராஜ் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அனைத்து குவாரிகளையும் சோதனை செய்து 54 குவாரிகளில் 53 குவாரிகள் விதிகளை மீறி நடப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. அவற்றில் 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து அந்த 24 குவாரிகளுக்கும் 2022-ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரூ262 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல் ராஜ் அவசர அவசரமாக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஜெயகாந்தன் என்ற இ.ஆ.ப. அதிகாரி நியமிக்கப்படுகிறார். கனிமக் கொள்ளையருக்கு விதிக்கப்பட்ட ரூ.262 கோடி அபராதத்தை வெறும் ரூ.13.8 கோடியாக குறைத்ததுடன், அதை தவணை முறையிலும் செலுத்த அவர் ஆணையிடுகிறார். அதுவும் கூட அபராதமாக காட்டப்படாமல், ராயல்டியாக காட்டப்பட்டுள்ளது. அதாவது அங்கு கனிமவளக் கொள்ளையே நடக்கவில்லை; முறைப்படி வெட்டி எடுக்கப்பட்ட கனிமவளத்துக்கான ராயல்டியாக இத்தொகை பெறப்பட்டுள்ளது என்பது தான் இதன் பொருள். விஞ்ஞான ஊழல் என்பது இது தான்.
நெல்லை மாவட்டத்தில் 24 குவாரிகளில் இந்த அளவுக்கு கொள்ளை நடந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 53 குவாரிகளிலும் சேர்த்து நடந்த கொள்ளையின் மதிப்பு ரூ.600 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களையும் சேர்த்தால் கனிமவளக் கொள்ளையின் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் கூடுதலாக இருக்கக் கூடும். ரூ.1000 கோடி கொள்ளை என்பது உரிமம் பெற்று நடத்தப்படும் கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமவளங்களின் மதிப்பில் ஒரு பகுதி தான். கூடுதலாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமவளங்களின் துல்லியமான அளவு, உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிமவளங்களின் மதிப்பு ஆகியவையும் கணக்கிடப்பட்டால் கனிமக் கொள்ளையின் மதிப்பு, அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும்.
All roads lead to Rome என்பதைப் போல கனிமவளக் கொள்ளையைப் பொறுத்தவரை குற்றஞ்சாட்டும் அனைத்து விரல்களும் ஆளுங்கட்சியின் பெரும்புள்ளியான அந்த காட்பாதரையும், அவரது குடும்பத்தினரையும் தான் சுட்டுகின்றன. இந்த உண்மைகள் அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் கூட, ஏதோ காரணத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்த காட்பாதரை பாதுகாக்கிறார். அவரும் பதிலுக்கு விசுவாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். நெல்லை, தென்காசி, கன்னியா குமரி மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தி, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தராவிட்டால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காக்க முடியாது.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணை போவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது; வேலியே பயிரை மேய்வதை வேடிக்கைப் பார்க்க முடியாது. இதில் தொடர்புடையவர்களை இதுவரை பாதுகாத்து வரும் தமிழ்நாட்டு காவல்துறை கனிமவளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினால் அது நியாயமாக இருக்காது; கனிமக் கொள்ளையர்களுக்கு தண்டனை கிடைக்காது.
எனவே, தென்மாவட்டங்களில் நடந்த கனிமவளக் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஒருவேளை விஞ்ஞான ஊழல் புகழ் திமுக, இந்த கனிமவளக் கொள்ளையை மூடி மறைக்க முயன்றாலும், அடுத்த 4 மாதங்களில் ஆட்சி மாறியவுடன் கனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படுவதை பா.ம.க. உறுதி செய்யும். இதற்காக தென் மாவட்ட மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நானே தலைமையேற்று நடத்துவேன் என்று எச்சரிக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ