பீகார் தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
பாட்னா, 23 அக்டோபர் (ஹி.ச.) 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசா
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி குழப்பத்துக்கு தீர்வு காண் லாலுபிரசாத் யாதவ்-அசோக் கெலாட் சந்திப்பு - வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்


பாட்னா, 23 அக்டோபர் (ஹி.ச.)

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும்

11-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி

(மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு விரைவாக முடிவடைந்தது. அந்த கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்தன.

‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்ததால், கூட்டணி கட்சிகள் தனித்தனியாக தங்கள் விருப்பம்போல் வேட்பாளர்களை நிறுத்தின. 8 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடுகின்றன.

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்-மந்திரி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி தயங்கியதும் கூட்டணியில் குழப்பம் உருவாக காரணம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், பதற்றத்தை தணிப்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட், நேற்று பாட்னாவுக்கு சென்று ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவை சந்தித்தார்.

தொகுதி பங்கீட்டு சிக்கலை தீர்ப்பது குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர், வெளியே வந்த அசோக் கெலாட்டிடம், ‘‘தேஜஸ்வி யாதவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயாராக உள்ளதா?’’ என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அசோக் கெலாட் கூறுகையில்,

“நான் அறிவிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? 2 மாதங்களுக்கு முன்பு வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தியபோது, ராகுல்காந்திக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். சரியான முடிவை சரியான நேரத்தில் இருவரும் எடுப்பார்கள்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற 23-ந் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் தொகுதி பங்கீட்டு பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். தேர்தலில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம்.

அதிலும் மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற கூட்டணி தோல்வியடைந்ததால், பீகார் தேர்தல் வெற்றி எங்களுக்கு முக்கியமானது. பீகார் தேர்தல், தேசிய அரசியலின் பாதையை தீர்மானிக்கும்.

சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுவது அவசியம். இதை உணரும் அளவுக்கு பீகார் மக்கள் புத்திசாலிகள். எங்கள் கூட்டணியை விட தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் பெரியது. ஆனால் அதை ஊடகங்கள் கண்டுகொள்வது இல்லை. கூட்டணி தலைவர்கள் 23-ந் தேதி, கூட்டாக நிருபர்களை சந்திப்பார்கள்.

என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM