Enter your Email Address to subscribe to our newsletters
திருத்தணி, 23 அக்டோபர் (ஹி.ச.)
முருக பெருமான் கோவில்களில், நேற்று தொடங்கிய கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில், சூரசம்ஹாரம் நடைபெறும்.
ஆனால், திருத்தணி கோவில் முருகப் பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரம் பதிலாக புஷ்பாஞ்சலி நடப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்று
(அக் 22) திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இவ் விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலம் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இன்று (23ம் தேதி) முதல் வரும் 26ம் தேதி வரை காலை 9 மணி முதல் 11 மணி வரை கந்த சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவித்துள்ள கோவில் நிர்வாகம் பகல் 11 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b