வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) சென்னை பஸ் நகரில் உள்ள சீனிவாசபுரத்தில் வசிக்கும் மீனவர் பொதுமக்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் உணவுப் பொருட்களை வழங்கினார். பின்னர்,பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரத்தில் மழைக்காலங்களி
Masu


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை பஸ் நகரில் உள்ள சீனிவாசபுரத்தில் வசிக்கும் மீனவர் பொதுமக்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் உணவுப் பொருட்களை வழங்கினார்.

பின்னர்,பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கடலில் சரியான முறையில் சேர்வதற்கான நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் மூலம் நோய்த் தொற்றுகள் மற்றும் பிற பாதிப்புகள் ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகர உள்ளாட்சித் துறை ஒருங்கிணைந்து பணிபுரிகிறது.

மாநில அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழபுரம், ரெட்டில்ஸ், கண்ணன்கோட்டை, தேர்வாய், வீராணம் போன்ற ஏரிகளில் மொத்தம் 13,022 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதில் செம்பரம்பாக்கத்தில் 24 அடி கொள்ளளவில் 21 அடி நீர் உள்ளது. உபரி நீர் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

அடையாறு ஆற்றில் தற்போது 750 கனஅடி நீர் பாய்கிறது. முன்னர் 25 கனஅடி நீர் மட்டுமே இருந்தது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு, ஆற்றுப்படுகை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இப்போது எந்தப் பாதிப்பும் இல்லை. 40 ஆயிரம் கனஅடி நீர் வந்தாலும் அதை உள்வாங்க கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மழை முடியும் வரை மூன்று பொக்லைன் இயந்திரங்கள் தொடர்ந்து அகலப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 14 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த காலங்களில் சிறிய மழையில்கூட தண்ணீர் தேங்கியிருந்தது.

ஆனால் இப்போது அவ்வாறில்லை.

அடையாறு பகுதியில் 84 தடுப்புச் சுவர்கள் பழுதடைந்துள்ளன; அவை திருத்தப்படுகின்றன. சைதாப்பேட்டை பகுதியில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சைதாப்பேட்டை வரை தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிக்காக ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

என்றார்.

மழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

மெட்ரோ ரயில் பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருவதால் சிறிய சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் மக்களுக்கு சிரமம் குறைய தமிழக அரசு புதிய பாலங்கள் மற்றும் சாலை வசதிகளை உருவாக்கி வருகிறது, எனவும் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ