Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 23 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை அடுத்த காஞ்சிபுரத்தில் தனியார் ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தயாரித்த குழந்தைகளுக்கான இருமல் மருந்து குடித்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 25 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 112 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
அதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு
பயன்படுத்தப்படும் 112 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b